சீனா - ஜப்பான் லடாய்: 0

TamilN Networks | Monday, November 01, 2010 |

ஹனோய்:ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளான சீனா, ஜப்பான் இடையே, சுமுகமான உறவை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் சீனா, தன் முடிவில் இருந்து மாறவில்லை. எனினும், அரிய வகை கனிம வளங்கள் ஏற்றுமதி மீது விதித்துள்ள தடை விலக்கப்படும் என, சீனா அறிவித்துள்ளது.சீனா, ஜப்பான் இடையே உள்ள சில தீவுகளுக்கு இரு நாடுகளும் பல ஆண்டுகளாக தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகின்றன. இப்பிரச்னையில், சமீபத்தில் ஜப்பானின் கடற்படைப் படகு மீது சீன மீனவர் ஒருவரின் படகு மோதியதால், அவரை கைது செய்த ஜப்பான், சீனாவின் கடுமையான மிரட்டலுக்குப் பின் அவரை விடுவித்தது.

இதையடுத்து, இரு நாடுகளின் உறவும் சிக்கல் அடைந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மொபைல்போன், காற்றாலை இயந்திரம் தயாரிக்க பயன்படும் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்து விட்டது. இந்த கனிமங்கள் சீனாவில் மட்டுமே கிடைக்கும். அதனால் இம்மூன்று தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்நிலையில், வியட்நாமில் நடந்து முடிந்த, "ஆசியான்' மாநாட்டின் போது, சீனா மற்றும் ஜப்பான் இருநாடுகளும். தங்களுக்கு இடையிலான தீவுகளின் உரிமைப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண வேண்டும் என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டார்.இதற்கு, ஜப்பான் தயாராகவே இருந்த போதும், சீனப் பிரதமர் வென்ஜியாபோ மறுத்து விட்டார்.

ஹனான் உச்சி மாநாட்டின் போது ஜப்பான் பிரதமரைச் சந்திக்கவும் அவர் மறுத்து விட்டார். இதுபோன்ற பிரச்னைகளில் இரட்டை நிலை எடுக்கும் அமெரிக்காவும், இப்பிரச்னையில், தீவுகள் மீதான ஜப்பானின் உரிமை அந்நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது எனக் கருதுகிறது.இதனால் இப்பிரச்னையில் மேலும் சிக்கல் நீடிக்கிறது.

எனினும், தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் பலவற்றின் மீது சீனா, ஜப்பான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடும் நிலையில், இப்பிரச்னையை சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் தீர்ப்பதற்கு அமெரிக்கா உதவும் என, ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.ஹிலாரியின் இந்த ஆலோசனையை பரிசீலிப்பதாக சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜியே சி தெரிவித்துள்ளார். அரிய வகை கனிம ஏற்றுமதி விரைவில் தொடரும் என சீன அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

தயாராகுது டிஸ்கவரி! 0

TamilN Networks | Monday, November 01, 2010 |

புளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காக சேலஞ்சர், கொலம்பியா, டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டவர் என்ற 5 விண்கலங்கள் அமெரிக்க விண்வெளி மையம் நாசா பயன்படுத்தி வந்தது. இதில் சேலஞ்சர் கடந்த 1986ம் ஆண்டும், கொலம்பியா கடந்த 2003ம் ஆண்டும் வெடித்து சிதறியது. மீதமுள்ள 3 விண்கலங்கள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக பணியில் இருந்த அனைத்து விண்கலங்களும் அடுத்த ஆண்டுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இந்நிலையில் டிஸ்கவரி விண்கலம், தனது கடைசி பயணத்தை வரும் நவம்பர் 1ம் தேதி மேற்கொள்கிறது. இதற்காக இந்த விண்கலம் நேற்று புளோரிடாவில் உள்ள கேப்கேனவரால் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடைசி பயணத்துக்காக டிஸ்கவரி விண்கலம், எடுத்துச் செல்லப்படுவதை, நாசா ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நேற்று ஒருவித சோகத்துடன் பார்வையிட்டனர். எண்டவர் விண்கலம் தனது கடைசி பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. விண்கலங்களின் பயன்பாடு ஒவ்வொன்றாக முடிவுக்கு வருவதால், நாசாவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களும் அடுத்த மாதம் 1ம் தேதியுடன் வேலையிழக்கின்றனர்.

மாட்டேன்! விஜயகலா M.P! 0

TamilN Networks | Monday, November 01, 2010 |

அரசுடன் இணையும் நோக்கம் எப்போதும் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர் அரசுடன் இணையப் போகின்றார் என்று பரவலாக கதைகள் அடிபடுகின்றன. இது குறித்துக் கேட்டபோதே இவர் இவ்வாறு கூறினார்.

இவர் இது குறித்துத் தெரிவித்தவை வருமாறு:

நான் அரசில் இணையப் போகின்றேன் என்று வெளியாகி இருக்கும் உண்மையும் இல்லை. நான் அரசுடன் இணைகின்றமையாயின் அது எப்போதோ நடந்திருக்கும். என்னை அரச தரப்பினர் ஏற்றுக் கொள்வார்களோ என்பது அடுத்த சந்தேகம். எனது கணவருக்கு கூட அரசுடன் இணையும் எண்ணம் இருந்திருக்கவே இல்லை.

ரீமா சென் மர்ம நபருடன்! 0

TamilN Networks | Monday, November 01, 2010 |

ரீமாசென் பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை சமீபகாலமாக ஒரு மர்ம இளைஞர் பின் தொடர்வதாகவும் இருவரும் ரகசியமாக சந்தித்து பேசுவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின.

அந்த வாலிபர் ரீமா சென்னின் காதலர் என்றும் கூறப்பட்டது. நேற்று முன் தினம் ரீமாசென் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதில் அந்த வாலிபரும் பங்கேற்றதாக தகவல் வெளியானது. இதுபற்றி ரீமாசென்னிடம் கேட்ட போது, மறுத்தார்.

நான் காதலனுடன் சுற்றவில்லை. மர்ம வாலிபர் என்னை பின் தொடர்கிறார் என்பதெல்லாம் உண்மைக்கு மாறானவை. எனது பிறந்த நாள் விழாவிலும் அப்படிப்பட்ட யாரும் பங்கேற்க வில்லை. எனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மிகச்சிலர் பங்கேற்றனர். விருந்து சந்தோஷமாக இருந்தது என்றார்.

சிறுநீரகக் கல் ... 0

TamilN Networks | Monday, November 01, 2010 |

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். “கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது.

சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம்; சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்; கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம்.

கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும்.

இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு.

உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம்.

அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும். எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார்.

சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம்.

கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை.

கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது.

சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது. சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும்.

அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவதுநல்லது.

விண்வெளி போகும் ரோபோ! 0

TamilN Networks | Saturday, October 30, 2010 |

பூமியில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் சுற்றிவருகிறது ‘சர்வதேச விண்வெளி மையம்’ (ஐஎஸ்எஸ்). பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சென்று தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இங்குள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவவும் ஐஎஸ்எஸ்-சில் பராமரிப்பு, ரிப்பேராகும் கருவிகளை சரிசெய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வசதியாகவும் ‘ரோபோநாட்-2’ என்ற ரோபோவை நாசாவும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் ரோபோநாட் திறம்பட செயல்படுகிறதா என்ற கடைசிக்கட்ட சோதனை நடந்து வருகிறது. இது முடிந்த பிறகு, விண்ணுக்கு புறப்படுகிறது இந்த ரோபோ.

வல்லாரை மருத்துவம்! 0

TamilN Networks | Saturday, October 30, 2010 |

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.

பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம்.

பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம். இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும். சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.

வல்லாரை கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து அது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

வல்லாரை வைத்தியம்

1. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.

2. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

3. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

4. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

5. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

6. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

7. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

அதிவேக சுப்பர் கணினி! 0

TamilN Networks | Saturday, October 30, 2010 |

உலகின் அதி வேக சுப்பர் கணினியை (Super Computer) கொண்ட நாடு என்ற பெருமையை சீனா நேற்று பெற்றுக்கொண்டது.

டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படும் கணினியே அது. இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும்.

இது மற்றைய சுப்பர் கணினிகளைவிட 43 வீதம் வேகம் கூடியது.

இக்கணினியானது சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான மொத்த செலவு 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோற்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.

இக்கணினி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் ( CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) கொண்டுள்ளது.

முதன் முறையாக 2009 ஆம் ஆண்டு இக்கணினி உருவாக்கப்பட்டது. அதன்போது இது உலகின் 5 ஆவது வேக கணினி என்ற பெருமையை மட்டுமே கொண்டிருந்தது.

ஆனால் தற்போது இது நன்கு மேம்படுத்தப்பட்டதையடுத்து உலகின் 'அதிவேக கணினி' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதுவரை அமெரிக்காவின் கிரேஸி எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணினியாக இருந்து வந்தது. இது 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டது. இதன் வேகம் 1.75 பீடாபுலொப்ஸ் (Petaflops) ஆகும்.

எனினும் சீனா அதனை டியானி ( Tianhe ) - 1 A மூலம் முறியடித்துள்ளது.

இலங்கையில் ஹிட்லர் ஆட்சி! 0

TamilN Networks | Saturday, October 30, 2010 |

சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தையும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஒரு லட்சம் பேரைத் திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"1933ஆம் ஆண்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் ஹிட்லர் அரச அதிகாரங்களைக் கைப்பற்றினார். அது போல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு போன்ற பல்வேறு ஆணைக் குழுக்களை ஜனாதிபதி தனது கையில் எடுத்துள்ளார்.

அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட தினம் தான் செப்டம்பர் 8ஆம் திகதி ஆகும். எனவே நவம்பர் 8ஆம் திகதியோடு அதற்கு இரண்டு மாதம் பூர்த்தியாகின்றது. அன்றும் நாடளாவிய ரீதியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதே விதமாக எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மூன்று மாதமாகிறது. இருப்பினும் டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப் பட்ட தினத்தை நினைவுகூருவதுடன் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தி சரத் பொன்சேகாவை மீட்டெடுப்போம்" என்றார்.

பலம் தரும் பீட்ரூட் கீரை! 0

TamilN Networks | Saturday, October 23, 2010 |

பெரும்பாலான கிழங்கு வகைகளில் நார்சத்துக்கள் அதிகம் காணப்படுவதில்லை. வெறும் கார்போஹைட்ரேட் சத்துகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. அதிலும் நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான கிழங்குகள், வெறும் ருசிக்காக மட்டுமே பயன்படுகின்றன. கார்பாஹைட்ரேட் அதிகம் நிறைந்த

கிழங்குகளை சிப்ஸ், வறுவல், பொரியல் என எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அதில் தங்கியுள்ள உயிர்சத்துகள் அழிந்து விடுகின்றன.

கிழங்கு மற்றும் விதை வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது அத்துடன் அதன் மேல் பாகங்களான இலை, விதை மற்றும் தண்டுகளையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள் ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம், பூண்டு போன்றவற்றின் கீரைப் பகுதிகளையும் உணவில் சூப் அல்லது அரைத்த விழுதாக சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் கிழங்குகளில் இல்லாத சில உயிர்சத்துக்களும், கனிமங்களும், அத்தியாவசிய உப்புகளும், நார்சத்துகளும் இந்த கீரைகளில் பெருமளவு உள்ளன. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது.

சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டிலிருந்து சாயம் தயாரிக்கப்பட்டு, பலவிதமான உணவுப் பொருட்களும் நிறமேற்றப்படுகின்றன. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. கிழங்குகளைவிட இதன் இலைகள் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன. கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன.

இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக் அமிலம், ஏ வைட்டமின், பி வைட்டமின்கள் மற்றும் புரொஜஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாட்டிற்கும் பெருமளவு உதவுகின்றன. இலை மற்றும் கிழங்குகள், சிறுநீரை நன்கு பெருக்கி, இதய வீக்கத்தை குறைக்கின்றன. பீட்ரூட்டிற்கு இனிப்பு சுவை இருந்த போதிலும் இதன் இலை மற்றும் கிழங்கு சாறானது ரத்த சர்க்கரையளவை குறைக்கின்றன. கல்லீரலின் கொழுப்பை கரைக்கின்றன. பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைந்து, மென்மையான சதைப்பகுதிகளை சுருங்கி, விரியச் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. பீட்ரூட் கிழங்குகளை உணவில் அதிகமாக உட்கொள்ளும் பொழுது தற்காலிகமாக சிறுநீர் மற்றும் மலம் சிவப்பாக செல்வதுண்டு.

உணவில் உள்ள சத்து, உடலால் முழுவதும் கிரகிக்கப்பட்டதும், இந்நிலை மாறி விடுவதுண்டு. செரிமான கோளாறுகளை நீக்கி, உணவுப்பாதையில் தோன்றிய அழுகல் மற்றும் கழிவுகளை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. பூண்டு உட்கொள்ளும் பொழுது ஏற்படும் வாய் நாற்றத்தை நீக்கவும் பீட்ரூட் துண்டுகளை வாயில் போட்டு மென்று வரலாம். சாலட், பொரியல், ஜாம், ஊறுகாய், சூப் என பலவகைகளில் உட்கொள்ளப்படுகிறது.

பீட்ரூட் இலை மற்றும் கிழங்கை வேகவைத்து, சூப் தயார் செய்யலாம். பீட்ரூட் இலை-2 கைப்பிடியளவு, பீட்ரூட் கிழங்கு-200 கிராம், தக்காளி-2, பெரிய வெங்காயம் அரிந்தது-2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய்-2, சீரகம் மற்றும் சோம்பு அரைத்த கலவை-ஒரு கரண்டி, தேங்காய் துருவல்-2 மேசைக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட் இலைகளை ஓடும் நீரில் அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பீட்ரூட் கிழங்கையும் தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

வெட்டிய வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் சோம்பு, சீரக கலவை ஆகியவற்றை வதக்கி, அத்துடன் பீட்ரூட் இலை மற்றும் கிழங்கு துண்டுகளை கலந்து 500மி.லி., நீரில் போட்டு வேகவைத்து, வெந்ததும், அரைத்த தேங்காய் துருவலை கலந்து, மீண்டும் 250 மி.லி., நீர் ஊற்றி நன்கு கொதிக்கவைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை வாரம் ஒருமுறை குடித்து வர ரத்த ஓட்டம் சீராகும்; சிறுநீர் நன்கு பெருகும்; ரத்த சோகையினால் பெண்களுக்கு தோன்றும் மாதவிலக்கு தடை நீங்கும். கல்லீரல் பித்தப்பையில் தோன்றும் கற்கள் மற்றும் மண்ணீரல் வீக்கம் நீங்கும்.