சீனா - ஜப்பான் லடாய்: 0

TamilN Networks | Monday, November 01, 2010 |

ஹனோய்:ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளான சீனா, ஜப்பான் இடையே, சுமுகமான உறவை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் சீனா, தன் முடிவில் இருந்து மாறவில்லை. எனினும், அரிய வகை கனிம வளங்கள் ஏற்றுமதி மீது விதித்துள்ள தடை விலக்கப்படும் என, சீனா அறிவித்துள்ளது.சீனா, ஜப்பான் இடையே உள்ள சில தீவுகளுக்கு இரு நாடுகளும் பல ஆண்டுகளாக தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகின்றன. இப்பிரச்னையில், சமீபத்தில் ஜப்பானின் கடற்படைப் படகு மீது சீன மீனவர் ஒருவரின் படகு மோதியதால், அவரை கைது செய்த ஜப்பான், சீனாவின் கடுமையான மிரட்டலுக்குப் பின் அவரை விடுவித்தது.

இதையடுத்து, இரு நாடுகளின் உறவும் சிக்கல் அடைந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மொபைல்போன், காற்றாலை இயந்திரம் தயாரிக்க பயன்படும் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்து விட்டது. இந்த கனிமங்கள் சீனாவில் மட்டுமே கிடைக்கும். அதனால் இம்மூன்று தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்நிலையில், வியட்நாமில் நடந்து முடிந்த, "ஆசியான்' மாநாட்டின் போது, சீனா மற்றும் ஜப்பான் இருநாடுகளும். தங்களுக்கு இடையிலான தீவுகளின் உரிமைப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண வேண்டும் என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டார்.இதற்கு, ஜப்பான் தயாராகவே இருந்த போதும், சீனப் பிரதமர் வென்ஜியாபோ மறுத்து விட்டார்.

ஹனான் உச்சி மாநாட்டின் போது ஜப்பான் பிரதமரைச் சந்திக்கவும் அவர் மறுத்து விட்டார். இதுபோன்ற பிரச்னைகளில் இரட்டை நிலை எடுக்கும் அமெரிக்காவும், இப்பிரச்னையில், தீவுகள் மீதான ஜப்பானின் உரிமை அந்நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது எனக் கருதுகிறது.இதனால் இப்பிரச்னையில் மேலும் சிக்கல் நீடிக்கிறது.

எனினும், தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் பலவற்றின் மீது சீனா, ஜப்பான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடும் நிலையில், இப்பிரச்னையை சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் தீர்ப்பதற்கு அமெரிக்கா உதவும் என, ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.ஹிலாரியின் இந்த ஆலோசனையை பரிசீலிப்பதாக சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜியே சி தெரிவித்துள்ளார். அரிய வகை கனிம ஏற்றுமதி விரைவில் தொடரும் என சீன அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

0 Responses So Far: