நாடாளுமன்றம் செல்வேன்! 0

TamilN Networks | Sunday, October 03, 2010 |

”ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வாழ்வுக்கு எனது கணவர்தான் பாரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றார். எனது கணவருடன் அரசியல் ரீதியாக மோத முடியாது என்பதை நன்றாகவே அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.ஏனெனில் மக்கள் எனது கணவர் பக்கமே திரண்டு நிற்கின்றார்கள்.

ஆகவேதான் அவருக்கு எதிராக கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள். அவசியம் ஏற்பட்டால் நான் நாடாளுமன்றம் சென்று எனது கணவரின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றி வைப்பேன்.” இப்படி தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா எம்.பியின் மனைவி அனோமா பொன்சேகா.

இரண்டு வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை பெற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 07 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று அரசமைப்புக் கூறுகின்றது. இது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அனோமா இப்படிக் கூறினார்.

அவர் முக்கியமாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

"அரசமைப்பு என்ன சொல்கின்றது?, சட்டம் என்ன சொல்கின்றது என்றெல்லாம் எனக்கு விபரமாகத் தெரியாது. ஆனால் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எனது கணவர் முன்னெடுத்த அரசியல் பாதை வழியே தொடர்ந்து செல்வேன். அவரது அரசியல் அபிலாஷையை நிறைவேற்ற இயலுமானவரை பாடுபடுவேன்.அவசியம் ஏற்பட்டால் நாடாளுமன்ற அரசியலிலும் ஈடுபடுவேன்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற அயல் நாடுகளும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேலைத்தேய நாடுகளும் சர்வதேச சமூகமும் இலங்கையில் ஜனநாயகம் ஆட்சியாளர்களால் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன. இலங்கையில் ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் இந்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்னாசிய பிராந்தியத்துக்கு மட்டுமல்ல, உலக சமாதானத்துக்குக்கூட பேராபத்தானவையாக உள்ளன.

எனது கணவருக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நீதியாக இடம்பெறவில்லை என்பதை எல்லோருமே அறிவோம். இந்நீதிமன்ற விசாரணை கூட இராணுவ சட்டங்களுக்கு முரணானதுதான். ஏனெனில் எனது கணவரை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணையாளர்கள் அவரைக் காட்டிலும் கனிஷ்ட உத்தியோகத்தர்கள்.அவரை சிறைக்கு அனுப்பி விட்டார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளே இவை என்பதில் சந்தேகம் இல்லை.”

0 Responses So Far: